குளித்து முடித்தே விடிந்த பொழுது
குளிரில் தொடங்கினாள் வேலைகளை..
ஒண்டிக்கட்டையான அவள்
பிள்ளைகள் எழவில்லை இன்னும்...
தன்வீட்டு வேலைகள் முடித்து
கிளம்பினாள் வீட்டுவேலை செய்ய..
சற்றே காலகற்றி நடந்தவள்,
சரியாய் நடக்க தொடங்கினாள்
வீட்டினுள்ளே சென்றதும்...
மகளின் பிறந்த நாளுக்காய் இழைத்தாள்..
சிறிதும் வலி காட்டிக்கொள்ளா வள்ளியவள்
வீட்டை முழுதும் சுத்த படுத்தி, சமைத்து முடித்தாள்...
ஆசையுடன் பணம் கேட்டாள்..
மகனின் மலம் சிந்திய உடைகளை
துவைக்கும்படி தூக்கிப்போட்ட வீட்டம்மா
சற்று தூரமே நின்று பேசினாள் அதிகாரத்துடன்...
துவைத்தவள் துவண்டுவிட கசிந்தது ரணம்...
வீட்டம்மா விடாத நோட்டமா...?
கண்டாள்.. மென்றாள்.. சென்றாள்...
மகளின் ஆசை வடிந்திட தலைகுனிந்து வீடு வந்தாள்..
மறுநாள் ஆசையுடன் ஓடிவந்து மகள்கேட்ட பரிசு...
இன்னைக்கு வேலைக்கு போகாதம்மா...

0 Comments