புன்னகை காட்டியே உள்நுழைந்த ரமேஷ்
கட்டிலில் சாய்ந்தான்... சுழலும் மின்விசிறி
சுழன்று கலக்கியது நினைவுகளை...
அம்மாவின் குரல் அன்பாய் எதிரொலித்தது..
வார்த்தைகள் சரியாய் கேட்டிடவில்லை...
கதவை சடாலென திறந்து,
நினைவை சாற்றியவன் ரமேஷ் நண்பன்தான்...
தோளில் கை போட்டு பசிக்குதுடா
என்றான் சோர்வாக.. உணவறைக்கு சென்றனர்
பசியை சுமந்தே.. பலகுரல்கள் கூச்சலிட்டன..
சங்கமத்தில் கலந்திட்ட ஆறு போலாயினர்...
வரிசையில் நின்றனர்.. வழக்கமான வாசத்தோடு..
தினசரி உணவான அவை,
பரிமாறப்பட்டன ஏனோதானோவென..
சைவ விடுதி என்பதால் மெலிந்தே
இருந்தனர் அவர்களுண்ணும் சாம்பாரில்
கிடந்த காயை போல...
கூச்சல்கள் கலங்கலாக கேட்டவண்ணமிருக்க சாம்பார் வழியும்
சாதத்தை கையில் அள்ளி கொண்டு
சென்றான் வாயருகே...
குடும்பத்தை தொலைத்த இரு சிறு
புழுக்கள் உயிர் விட்டிருந்தன..
முதல் வாய் சாதத்திலேயே.. கண் கலங்கினான்..
உயிரின் நிலையை எண்ணி மட்டுமல்ல..
தன் நிலை எண்ணியும்.. இரண்டு நிமிடத்திலேயே
ரசத்திற்காக வரிசையில் நின்றான்...

0 Comments